தூத்துக்குடி மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, காளி வேடமிடும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து, கடலில் புனித நீராடி, அர்ச்சகர் கையால் துளசிமாலை அணிந்து விரதத்தைத் தொடங்கி வருகின்றனர்.

இதனையொட்டி கடற்கரையில் ஏராளமானோர் துளசிமாலை விற்பனை செய்து வருகின்றனர். நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த எவராஜ் மகன் குட்டி (30) என்பவரும் தனது குடும்பத்தினருடன் அங்குத் தங்கி, தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் துளசி மாலைகளை வைத்து விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில், கடற்கரையில் துளசிமாலை விற்பனை செய்யக் கோவில் காவலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை அங்கிருந்து விரட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கு குட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த குட்டி, திடீரெனத் தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். அலறித் துடித்த அவரைக் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டுத் தீயை அணைத்தனர்.

உடல் கருகி பலத்த காயமடைந்த குட்டி, சிகிச்சைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்துக் குலசேகரன்பட்டினம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.