திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (12.11.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்குரிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில், 01.01.2027-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளவும் ஏதுவாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் - 2027 கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்குரிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 12.11.2026 மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர் எண்ணிக்கை விவரம்: 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் விவரங்கள் பின்வருமாறு:

• திருநெல்வேலி: 1,34,299 ஆண் வாக்காளர்கள், 1,43,139 பெண் வாக்காளர்கள், 80 மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2,77,518 வாக்காளர்கள்.

• அம்பாசமுத்திரம்: 1,11,408 ஆண் வாக்காளர்கள், 1,18,908 பெண் வாக்காளர்கள், 13 மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2,30,329 வாக்காளர்கள்.

• பாளையங்கோட்டை: 1,25,408 ஆண் வாக்காளர்கள், 1,33,052 பெண் வாக்காளர்கள், 18 மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2,58,478 வாக்காளர்கள்.

• நாங்குனேரி: 1,27,399 ஆண் வாக்காளர்கள், 1,31,836 பெண் வாக்காளர்கள், 13 மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2,59,248 வாக்காளர்கள்.

• இராதாபுரம்: 1,22,656 ஆண் வாக்காளர்கள், 1,26,711 பெண் வாக்காளர்கள், 26 மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2,49,393 வாக்காளர்கள்.

மாவட்டம் முழுவதும் சேர்த்து மொத்தம் 6,21,170 ஆண் வாக்காளர்களும், 6,53,646 பெண் வாக்காளர்களும், 150 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 12,74,966 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,532 சேவை வாக்காளர்கள் (Service Voters) உள்ளனர்.

மனுக்கள் அளிக்கும் காலம் & சிறப்பு முகாம்கள்: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2027 பணிகள் இன்று (12.11.2026) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி 12.11.2026 முதல் 11.12.2026 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்குரிய விண்ணப்பப் படிவங்களை வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகத்தில் அளிக்கலாம்.

மேலும், வாக்காளர்களின் நலன் கருதி இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி பின்வரும் 3 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன:

• நவம்பர் 21, 2026 (சனிக்கிழமை)

• நவம்பர் 22, 2026 (ஞாயிற்றுக்கிழமை)

• நவம்பர் 29, 2026 (ஞாயிற்றுக்கிழமை)

பொதுமக்கள் இந்தச் சிறப்பு முகாம் நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களை அளித்திடலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்குட்பட்ட 1,680 வாக்குச்சாவடிகளிலும் நியமன அலுவலர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இணையவழி விண்ணப்பம் மற்றும் உதவி மையங்கள்: நேரில் செல்ல இயலாதவர்கள் www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ECINet செயலி மூலமாகவும் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) செயலி வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்குக் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ஐத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கா.பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.வித்யா, வருவாய் கோட்டாட்சியர் பிரியா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.