மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் புகுந்து துப்பாக்கி முனையில் 27 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.12½ லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி உட்பட 4 பேரை கிராம மக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டம் போக்கர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையினுள்ளே கடந்த சனிக்கிழமை பிற்பகல், பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளைக் கும்பல் ஒன்று திடீரெனப் புகுந்தது.
வங்கியிலிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய அக்கும்பல், வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 27 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை 5 பைகளில் அள்ளிக்கொண்டு, மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
கொள்ளைக் கும்பல் வங்கியிலிருந்து தப்பியோடுவதைக் கண்ட அப்பகுதி கிராம இளைஞர்கள், உடனடியாக அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைத்தனர்.
முன்னாள் போலீஸ் அதிகாரி மாட்டிய பின்னணி:
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இக்கொள்ளைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி சங்கர் ரமேஷ் ஜசக் (42) என்பதும், இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி என்பதும் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைதான மற்ற கொள்ளையர்கள் கஜானன் ராஜேந்திர பவார் (32), அங்குஷ் துளசிராம் சவான் மற்றும் அங்குஷ் சவான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 27 கிலோ தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைப் போலீசார் முழுமையாக மீட்டுள்ளனர்.

