கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், ஆட்சியரின் துணிச்சலைப் பாராட்டியும், தமிழக அரசைக் கண்டித்தும் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்துத் தி.மு.க. எம்.பி. கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: "த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்?

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன். இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் விஜய், இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா? தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

த.வெ.க. எம்.எல்.ஏ.-வைக் கைது செய்ய மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "பல்வேறு வகைகளிலும் இந்தச் சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவரான (District Magistrate) பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்தப் பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? அ.தி.மு.க. சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு பிரமாணப் பத்திரம் (Affidavit) தாக்கல் செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது.

அப்படியென்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த அரசின் முதல்வரும், அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து சதி (Conspire) செய்துள்ளார்கள் என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது. ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்:

காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், "பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.