தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சின்னபட்டியைச் சேர்ந்தவர் பூபதி (45). இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டனூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரம் செய்து வந்த இவருக்கு, சுஜிதாஸ்ரீ என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று அதிகாலையில் சுஜிதாஸ்ரீ, கணவரின் தங்கை பூங்கொடி என்பவருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "மகனுக்கு உடம்பு சரியில்லாததால் ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்றுப்பகுதிக்கு வந்தோம். அப்போது வந்த மர்ம நபர்கள் கணவரைக் கொலை செய்துவிட்டு, எனது நகைகளைப் பறித்துச் சென்றுவிட்டனர்" எனக் கதறி அழுத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காரின் முன் இருக்கையில் பூபதி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டனர். உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இருப்பினும், சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட காரில் எவ்விதத் தடயமும் இல்லை. மேலும், நகை பறிக்கப்பட்டதாகக் கூறிய சுஜிதாஸ்ரீக்குச் சிறிய காயம்கூட ஏற்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் சுஜிதாஸ்ரீயிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில், சுஜிதாஸ்ரீக்கு எதிரான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சுஜிதாஸ்ரீக்குத் திருமணமான இளைஞர்களுடன் தவறான பழக்கம் இருந்து வந்துள்ளது.
குறிப்பாக, அவரது வீட்டிற்கு எதிரே வசிக்கும் பெங்களூரு ஐ.டி. ஊழியரான சந்தோஷ் ராஜ் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்த கணவர் பூபதி கண்டித்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, சுஜிதாஸ்ரீ பூபதியை கீழே தள்ளியதில் அவருக்குத் தலையில் அடிபட்டு மயங்கினார். உடனே தனது கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜை வரவழைத்து, இருவரும் சேர்ந்து பூபதியைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
கணவர் இறந்ததை உறுதி செய்ததும், உடலைக் காரின் முன் இருக்கையில் உட்கார வைத்து ஓமலூர் - தாரமங்கலம் சாலையில் உள்ள ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்றுப்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர், கோவிலுக்குச் சென்றபோது நகைக்காக மர்மநபர்கள் கணவரைக் கொன்றதாக நாடகமாடியுள்ளனர்.
உண்மையைக் கண்டறிந்த போலீசார், தொழிலதிபரின் மனைவி சுஜிதாஸ்ரீயைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

