தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பஜார் பகுதியில் போதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களைப் பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரைக் கீழே தள்ளிவிட்டுத் தப்பிய சம்பவத்தில், சார்பு ஆய்வாளர் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆத்தூர் பரதர் தெருவைச் சேர்ந்த ஜான் என்பவரின் மகன் ராகேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவரின் மகன் எமர்சன் ஆகிய இருவரும் ஆத்தூர் பஜார் பகுதியில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாகத் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (SI) பொன் முனியசாமி (59) தலைமையிலான போலீசார், தகராறில் ஈடுபட்ட இருவரையும் விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து வர முயன்றனர்.
போலீசாரின் வாகனத்திற்குப் பின்னால் தங்களது இருசக்கர வாகனத்தில் வருவது போல வந்த இருவரும், பஜார் சாலையில் திடீரெனத் திரும்பித் தப்பிச் செல்ல முயன்றனர். இதைக் கண்ட உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி மற்றும் போலீசார், தங்களது இருசக்கர வாகனத்தில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
அப்போது, தப்பியோட முயன்ற இளைஞர்கள் இருவரும் உதவி ஆய்வாளர் பொன் முனியசாமியை ஓடும் பைக்கில் இருந்து பலமாகத் தள்ளிவிட்டுத் தப்பினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த உதவி ஆய்வாளர் பொன் முனியசாமிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தப்பியோடிய எமர்சனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான ராகேஷைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

