தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாலை, பள்ளி நூலக அறையில் வைத்து 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவரின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியைத் தூவி சக மாணவர்கள் கொடூரமாகத் துன்புறுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் இதுகுறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவர் ஏழாம் வகுப்பு பயின்று வந்த காலம் முதலே, இந்த மாணவர்கள் தொடர்ச்சியாக அவரது பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியைத் தூவித் துன்புறுத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ (POCSO) சட்டங்களின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட 5 மாணவர்களைக் கைது செய்தனர்.
பின்னர், தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதிக்குழுமம் முன்பாக அவர்களை ஆஜர்படுத்தி, செப்டம்பர் 1-ஆம் தேதி இரவு திருநெல்வேலியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய பிற 3 மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

