தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெரிய தெப்பக்குளம் அருகேயுள்ள வடக்கு ரதவீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் முத்துக் கணேசன் (29), மெக்கானிக்கல் என்ஜினீயர். இவர் எட்டயபுரம் நாவலக்கம்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்குக் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மகேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

முத்துக் கணேசன் தினமும் மதியம் உணவருந்த வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று மதியம் அவர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மனைவி மகேஸ்வரி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.

அப்போது, 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல், கதவு திறந்திருந்த நிலையிலிருந்த வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்தது. கண்இமைக்கும் நேரத்தில் அக்கும்பல் உணவருந்திக் கொண்டிருந்த முத்துக் கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கதறி கூச்சலிட்டார்.

உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்துக் கணேசன் உயிருக்குப் போராடினார். அறை முழுவதும் ரத்தம் சிதறிக் கிடந்தது.

அப்போது அப்பகுதியில் பாம்பு பிடிப்பதற்காகச் சென்ற தீயணைப்புத் துறையினர், மகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக் கணேசனை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உறவினர்கள் திடீர் சாலை மறியல்:

இச்சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த முத்துக் கணேசனின் உறவினர்கள், கோவில்பட்டி - விளாத்திகுளம் பிரதான சாலையில் மாலை 3:30 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி முழக்கமிட்டதால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பவுல் யேசுதாசன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இதையேற்று அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, முன்பகையினால் இந்தத் தாக்குதல் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி, தப்பிய முகமூடிக் கும்பலைத் தேடி வருகின்றனர்.