தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பக்கிள் ஓடை விரிவாக்கம், மழைநீர் வடிகால் அமைத்தல், குடிநீர்க் குழாய்கள் பதித்தல், தார்ச் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பது போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, "எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரின் சாலை மற்றும் குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்க பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் புனரமைத்துக் கட்டடங்கள் எழுப்பப்படவுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி உதவிப் பொறியாளர்கள் பாண்டி, பாக்கியலெட்சுமி, திமுக 20-ஆவது வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், போல்பேட்டை பிரதிநிதி ஜேஸ்பர் ஞானமார்ட்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு:
தொடர்ந்து, தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்ற மேயர் ஜெகன் பெரியசாமி, அங்குள்ள மருந்துகள் இருப்பு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

