தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி, சுற்றுச்சூழலுக்குப் பெரும் மாசு ஏற்படுத்தும் வகையில் பல ஆண்டுகளாக ஆடு, மாடு அறுப்புத் தொட்டி செயல்பட்டு வருவதாகக் கூறி 'மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு' (மெகா) சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டலக் கிளை, கடந்த ஜூலை 24-ஆம் தேதி குறிப்பிட்ட அந்த ஆடு, மாடு அறுப்புத் தொட்டியை உடனடியாக மூட உத்தரவிட்டது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்தத் தடை உத்தரவை எதிர்த்து காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி. சரவணன் ஆஜரானார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழக்கறிஞர் மாதுரி முன்னிலையானார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் என். திலீப் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, பசுமைத் தீர்ப்பாயம் அளித்த மூடல் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது. மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

