"தூத்துக்குடி மக்களின் உயிரோடு விளையாடிய ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நிதி ஆதரவோடு மராத்தான் போட்டிகளை நடத்த முயன்றால் கடுமையான மக்கள் போராட்டங்களைச் சந்திக்க நேரிடும்" என்று 'ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு' எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக 'ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு' வெளியிட்டுள்ள அறிக்கையில் "தூத்துக்குடி மண்ணை நாசமாக்கி, எமது மக்களின் உயிரோடு விளையாடிய நாசகார ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, எமது மக்கள் வீதியில் இறங்கிப் போராடி இந்த மண்ணை விட்டு அதை விரட்டிய வரலாறும், அதற்காகச் செய்த உயிர் தியாகமும் நாடு நன்கு அறிந்ததே.
நீர்நிலைகள், காற்று, கடல் என ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் சீரழித்த அந்த நச்சு ஆலையை எந்த வடிவத்திலும், எந்தப் பெயரிலும் எமது மண்ணில் மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் தூத்துக்குடி மக்களின் உறுதியான நிலைப்பாடாகும்.
இந்நிலையில், தூத்துக்குடி மக்களின் ரத்தத்தோடு விளையாடிய அதே ஸ்டெர்லைட் / வேதாந்தா நிறுவனத்தின் பொருளாதார ஆதரவோடு (CSR) ரோச் பூங்காவில் இருந்து மராத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்படுவதாகவும், அதனைத் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஆ.ஸ்ரீநாத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மக்கள் விரோத கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுபோன்ற பல்வேறு சமூக நலப் பணிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் மூலமாக மீண்டும் காலூன்றப் பார்ப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்கள் நலன் காக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்களும் இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களின் மறைமுக ஆதரவு பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வது தூத்துக்குடி மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
நாசகார ஸ்டெர்லைட் அல்லது அதன் தாய் நிறுவனமான வேதாந்தாவின் நிதி ஆதரவோடு எத்தகைய நிகழ்வுகளையும் தூத்துக்குடி மண்ணில் நடத்த முயலாதீர்கள்! மீறி இதுபோன்ற கார்ப்பரேட் கரங்களின் ஆதரவோடு நிகழ்ச்சிகளை நடத்தினால், கடுமையான மக்கள் போராட்டத்தின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்." இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

