தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது 12 வயது மகன் அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில தினங்களுக்கு முன்பு வகுப்பறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாணவன் இயற்கை உபாதை கழிக்கச் செல்வதற்காக ஆசிரியர் வின்சென்ட்டிடம் அனுமதி கேட்டுள்ளான்.

ஆனால், ஆசிரியர் அனுமதி தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வகுப்பு முடிவடைந்ததும் மாணவன் அவசரமாகக் கழிப்பறைக்குச் செல்லப் புறப்பட்டுள்ளான். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த ஆசிரியர் வின்சென்ட், மாணவனை அழைத்து அனைத்து மாணவர்களின் முன்னிலையிலும் முட்டிப்போட வைத்துள்ளார். பின்னர், வேப்பங்கம்பால் மாணவனின் பின்னங்கால், கை, தொடை மற்றும் முதுகுப் பகுதிகளில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதில் மாணவனுக்கு உடலின் பல இடங்களில் பலத்த வீக்கமும் காயமும் ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் அழுகையுடன் நடந்த சம்பவத்தைக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை மாரியப்பன், காயமடைந்த தனது மகனை நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில் ஆசிரியர் வின்சென்ட் மீது புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் தந்தை மாரியப்பன் கூறுகையில்: "பள்ளிக்கூடத்தில் இயற்கை உபாதை கழிக்க அனுமதி கேட்பது குற்றமா? வகுப்பு முடிந்து கழிப்பறைக்குச் சென்ற என் மகனை முட்டிப்போட வைத்து ஆசிரியர் வின்சென்ட் கொடுமையாகத் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் நடந்த பிறகு, பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் மற்றும் சிலர் மருத்துவமனைக்கு வந்து புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்துகின்றனர். ஆனால் நான் புகாரை வாபஸ் பெறப் போவதில்லை. என் மகனைத் தாக்கிய ஆசிரியர் வின்சென்ட் மற்றும் நடவடிக்கை எடுக்கத் தவறிய தலைமை ஆசிரியர் மீது பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என வலியுறுத்தினார்.