தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் இன்று (நவம்பர் 21) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2027 பணிக்கான சிறப்பு முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விகாசா பள்ளி, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், பொதுமக்களிடம் பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காக இன்று (நவம்பர் 21), நாளை (நவம்பர் 22 - ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நவம்பர் 29 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய மூன்று நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இம்முகாம் நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

01.01.2027 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள், அதாவது 31.12.2008 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

படிவங்கள் மற்றும் இணையதள வசதி:

படிவம் - 6: வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க.

படிவம் - 7: பெயர் நீக்கம் செய்ய.

படிவம் - 8: பதிவுகளில் திருத்தம், முகவரி மாற்றம், வேறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தற்போதைய முகவரிக்கு மாற்றம், மாற்றுத்திறனாளி குறியீடு மற்றும் நகல் அடையாள அட்டை பெற.

மேலும், www.voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் ECINet மொபைல் செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை மற்றும் கள ஆய்வு செய்யப்பட்டு, 04.01.2027 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

நமது மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்வது குறைவாக உள்ளதால், 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் பெருவாரியாக முன்வந்து தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.இந்நிகழ்வின்போது தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் உடனிருந்தார்.