தூத்துக்குடி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அங்குச் சோதனை நடத்திய தனிப்படை போலீசார், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், அவர் தூத்துக்குடி மீளவிட்டான் தெற்குத் தெருவைச் சேர்ந்த சுந்தரவேல் மகன் அண்ணாதுரை (57) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கணேஷ் புகையிலைப் பாக்கெட்டுகள், கூல் லிப் உள்பட 93 புகையிலைப் பாக்கெட்டுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, பிடிபட்ட அண்ணாதுரை மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைத் தனிப்படை போலீசார் சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.