தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சிவன் கோவில் தெரு, பரமசிவன் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் மகேஸ்வரன் (42). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகேஸ்வரன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் அவரது மனைவி கடைக்குச் சென்றிருந்தபோது, வீட்டிற்குள் கதவைப் பூட்டிக்கொண்ட மகேஸ்வரன், மின்விசிறியில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

தூத்துக்குடி பூபாலராயபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் கிரகோரி (64). இவரது மனைவி வெனிசுலா. எந்தவித வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்த ஜோசப் கிரகோரி, அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார்.

இந்நிலையில், அதிக மதுபோதையில் இருந்த அவர் தனது வீட்டிற்குள் உள்ள கதவின் நிலையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்துத் தகவலறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.