தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் ரூ.152 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடைத் திட்டம் (UGSS) மற்றும் ரூ.16.06 கோடி மதிப்பிலான 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டப் பணிகளைத் தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிம்ரன்ஜித் சிங் கஹ்லோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ரூ.152 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் ரூ.16.06 கோடி மதிப்பிலான 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டப் பணிகளைத் தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் (TNUIFSL) மேலாண்மை இயக்குநர் சிம்ரன்ஜித் சிங் கஹ்லோன் இன்று (நவம்பர் 21) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளின் (UGSS) முன்னேற்றம், கட்டுமானப் பணிகளின் தரம், 24 மணி நேரக் குடிநீர் விநியோக அமைப்பு மற்றும் பாதாள சாக்கடைப் பணிகளின் மாதிரி இயக்கம் (Trial Run) ஆகியவற்றை அவர் விரிவாகப் பார்வையிட்டார்.

மேலும், சாலைகளில் நடைபெறும் பணிகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகளைக் குறைத்து, அனைத்துப் பணிகளையும் தரத்துடனும் விரைந்தும் முடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு மேலாண்மை இயக்குநர் சிம்ரன்ஜித் சிங் கஹ்லோன் அறிவுரைகள் வழங்கினார்.

PathalaSakkadaiWork.jpg

ஆய்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பாப்ருவான், மாநகரப் பொறியாளர் மற்றும் பொறியியல் பிரிவு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.