தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மீன்வள தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மீனவர்களின் நலனுக்காக முதன்முறையாகக் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் தலைமையில் இன்று (நவம்பர் 21) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் ஸ்ரீநாத், தமிழ்நாடு மீன்வள மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, மாணவ - மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் கடல்சார் கல்வி பயிலும் மீனவ சமுதாய இளைஞர்களுக்கு உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.
மேலும், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆபத்து நேரங்களில் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக 32 மீனவர்களுக்குச் செயற்கைக்கோள் தொலைபேசிகளையும், மாநில அளவில் சிறப்பாகச் செயல்பட்ட சாதனையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் பேசியதாவது: "தன்னுடைய குடும்பத்திற்காக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் பசியையும் போக்குவதற்காகக் கடல் அலைகளோடு போராடும் மீனவர்களின் வாழ்க்கையில் கண்ணீர் அலைகள் இருக்கக் கூடாது என்பதே முதலமைச்சரின் எண்ணம். மீனவர்களை வெறும் வாக்காளர்களாகப் பார்க்காமல், மண்ணின் வளர்ச்சிக்காக உழைக்கும் மக்களாகவும், பொருளாதாரத்தின் முக்கியத் தூண்களாகவும் இந்த அரசு பார்க்கிறது.
மீனவர்களின் நலனுக்காக முதன்முறையாகக் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீன்பிடி குறைக்கால நிவாரணத் தொகை ரூ.6,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டு, இதற்காக ரூ.138 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மீனவர்களுக்கான காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தவும், இழப்பீட்டை அதிகரிக்கவும் ஆலோசனை செய்து வருகிறோம். காணாமல் போன மீனவர்கள் மற்றும் அண்டை நாட்டினரால் கைது செய்யப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கான மாதாந்திர நிவாரணம் ரூ.350-லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மீன்வளத்துறை சார்பில் ரூ.109.12 கோடி மதிப்பீட்டில் மானிய விலையில் 14,373 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், வருங்காலத் தலைமுறைக்காகக் கடல் வளத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் முக்கியப் பொறுப்பாகும். மீனவர் நலன் காப்போம், கடல் வளம் பாதுகாப்போம், வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்" இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்ணம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மீனவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

