"எம்பவர் இந்தியா" அமைப்பின் கௌரவச் செயலாளர் திரு.ஆ.சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், நாள்பட்ட நோய்களுடன் வாழ்வதால் பாதிப்புக்கான அபாயம் மேலும் அதிகரிக்கிறது. தொற்றா நோய்களுக்கான சிகிச்சையைப் பெறும்போது யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய பல துறைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது.
கவனிக்கப்பட வேண்டிய முக்கியப் பகுதி: இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள் போன்ற தொற்றா நோய்களைத் தடுப்பது, ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, நோயறிதல், சிகிச்சை மற்றும் நீண்ட கால மேலாண்மை ஆகியவற்றில் தவிர்க்கக்கூடிய பாதிப்புகளைக் குறைத்தல்.
முக்கிய நோக்கம்: நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை அதிக ஆபத்துக்குள்ளாக்கும் கட்டமைப்புச் சவால்கள், சிதறிய சுகாதாரச் சேவைகள் மற்றும் சமூகக் காரணிகளைக் கையாள்வதுடன் முதன்மைச் சுகாதாரப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளித்தல்.
நோயாளி பங்கேற்பு: தொற்றா நோய்களுடன் வாழும் தனிநபர்களை சிகிச்சையைப் பெறும் செயலற்ற நபர்களாகக் கருதாமல் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் செயல்படும் கூட்டாளிகளாகக் கருதி நடத்துதல்.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் எபிநேசர் ஜோயல் குமார் இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து "உலக நோயாளி பாதுகாப்பு தினம்" குறித்த சுவரொட்டியை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை திரு.ஆ.சங்கர் பெற்றுக்கொண்டார்.
இந்திரா நீரிழிவு மையத்தின் நாளமில்லாச் சுரப்பி நிபுணர் டாக்டர் அருள் பிரகாஷ் சிறப்புரையாற்றினார். நோயாளி பாதுகாப்பை மேம்படுத்த சுகாதார அமைப்பில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே "உலக நோயாளி பாதுகாப்பு தின" பிரச்சாரத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பத்மநாபன் மற்றும் சேவியர் பயிற்சிப் பள்ளியின் முதல்வர் ஞானமுத்து ஜெயந்தி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். திருமதி மனோன்மணி நன்றியுரை ஆற்றினார்.
இம்மாநாட்டில் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

