தூத்துக்குடியில் திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது பைக் நிலைதடுமாறிச் சாலைத் தடுப்பில் மோதிய விபத்தில், சட்டக்கல்லூரி மாணவர் உட்பட நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாலகிருஷ்ணன் (27). இவரது நண்பர் தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரத்தைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகன் ஹரிஷ் பிரபாகரன் (26). இவர் சட்டக்கல்லூரி மாணவராகப் பயின்று வந்தார்.

நண்பர்களான இருவரும் நேற்று புதியம்புத்தூரில் நடைபெற்ற தங்களது நண்பரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். திருமண விழாவை முடித்துவிட்டு மாலையில் இருவரும் தூத்துக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனத்தைப் பாலகிருஷ்ணன் ஓட்டியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் எட்டயபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிச் சாலையின் நடுவே இருந்த மையத் தடுப்பில் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் மற்றும் ஹரிஷ் பிரபாகரன் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவ்விபத்து குறித்துத் தகவலறிந்த சிப்காட் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து சிப்காட் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பரின் திருமணத்திற்குச் சென்று திரும்பிய வழியில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.