அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் கடற்கரையில் கடல் அவ்வப்போது உள்வாங்கியும், சீற்றத்துடனும் காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கடல் உள்வாங்கிய நிலையில் காணப்பட்டு வந்தது. நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை திடீரென கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. வழக்கத்தைவிட அலைகளின் வேகம் அதிகரித்து, சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடற்கரை பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இதனால் கடல் அலைகள் அதிகளவில் கரையை நோக்கி வந்ததுடன், கடல்நீர் சுமார் 300 அடி தூரம் வரை கரைப்பகுதியை தாண்டி கோவிலைப்பார்த்து புகுந்தது. கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து பக்தர்கள் கடலில் நீராடும் இடம் வரையிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.
இதையடுத்து, கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அங்கு இருந்த பக்தர்களை பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தினர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், கடற்கரையில் சிறு வியாபாரிகள் அமைத்திருந்த கடைகளையும் கடல்நீர் சூழ்ந்தது.
நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட இந்த கடல் சீற்ற நிகழ்வால் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

