தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் தினகரன் வெள்ளையன் கூறியதாவது: "இந்தியாவின் உணவுத் தேவையில் தூத்துக்குடி உப்பளங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தென்கொரிய நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க முயல்வதை தமிழ்நாடு வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.
சுமார் 3,000 ஏக்கர் உப்பளங்களை அரசு கைப்பற்றுவது குஜராத் மாநில உப்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் செயலாகும். இதில் வட மாநிலத்தவர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்படும். மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்தத் திட்டம் தூத்துக்குடி மண்ணிற்குத் தேவையற்றது. மக்களுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் வியாபாரிகள் சங்கம் வீரியமாக எதிர்க்கும
யு.பி.ஐ வர்த்தகப் பரிவர்த்தனை சேவை வரி உயர்வு தனியார் வங்கிகளுக்கே லாபத்தை அளிக்கும் என்பதால் அரசு அதனைத் திரும்பப் பெற வேண்டும். மேலும், நகர்ப் பகுதியில் அதிக முதலீடு செய்து, வாடகை மற்றும் வரிகளைச் செலுத்தி வணிகம் செய்யும் வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அனுமதியற்ற சாலையோரப் பெரிய வணிகங்களை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு ரூ.90 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டுவது மக்கள் மற்றும் அரசின் பணத்தை வீண் விரயம் செய்யும் செயலாகும். இத்திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும், மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மாநகராட்சி கடைகளை இடிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற உத்தரவுகளை மாநகராட்சி பின்பற்றத் தவறினால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

