தூத்துக்குடி கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாகக் குறைந்த எண்ணிக்கையிலான நாட்டுப் படகுகளே மீன்பிடிக்கச் சென்றதால், மீன்களின் வரத்து குறைந்து சில வகை மீன்களின் விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வழக்கமாக ஏராளமான படகுகள் கடலுக்குச் சென்று சனிக்கிழமை கரை திரும்புவது வழக்கம். ஆனால், கடந்த இரு தினங்களாகக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான படகுகளே கரை திரும்பியதால் மீன் வரத்து வெகுவாகக் குறைந்தது.
ஒருபுறம் மீன்கள் வரத்து குறைந்த நிலையில், மறுபுறம் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் பொதுமக்கள் பலரும் அசைவ உணவுகளைத் தவிர்த்தனர். இதன் காரணமாகத் திரேஸ்புரம் மீன் ஏலக்கூடத்தில் வழக்கத்தை விடப் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
மீன்கள் வரத்து மிகக் குறைவாக இருந்த போதிலும், சந்தைக்கு வந்த சில முக்கிய ரக மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. சீலா மீன் கிலோ ரூ.1,000 வரை விற்பனையானது. விளைமீன், ஊழி, பாறை கிலோ ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனையானது.
நண்டு கிலோ ரூ.700 வரை விற்பனையானது. சூரை மீன் கிலோ ரூ.200 வரை விற்பனையானது. சாளை மீன் வரத்து சுத்தமாக இல்லாததால் ஒரு கூடை ரூ.3,000 வரை ஏலம் போனது. மீன் வரத்து குறைந்த நிலையிலும், சில வகை மீன்களுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

