தூத்துக்குடி பி.என்.டி. காலனி 10-வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (54). லாரி ஓட்டுநரான இவருக்குச் செல்வி (50) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கணவன் - மனைவி இடையே கடந்த சில நாட்களாகவே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை சுமார் 9 மணி அளவில் மீண்டும் கணவன் - மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி செல்வியை நோக்கிச் சரமாரியாக வெட்டினார்.
இதில் தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்த செல்வியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி கருப்பசாமி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

