தமிழக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில், ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட கோயில்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, தமிழக அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட ஆகமக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவால் ஆய்வு செய்யப்பட்டுப் பரிசீலிக்கப்பட்ட 34,971 திருக்கோயில்கள் தொடர்பான விரிவான விவரங்கள், அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் விடுபட்ட விவரங்கள் அல்லது கருத்துக்கள், ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க ஏற்கனவே கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது கூடுதல் அவகாசமாக வரும் அக்டோபர் 10-ஆம் தேதி மாலை 05.45 மணி வரை பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தபால் மூலமாகவோ அல்லது இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம் எனத் தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ரோஜாலி சுமதா தெரிவித்துள்ளார்.