தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பொய்யான பிம்பத்தை திமுக கட்டமைக்க முயன்று வருவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறையில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களில் 10,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பெரிய கட்டமைப்பை திமுக தொடர்ந்து உருவாக்கி வருகிறது. குற்றப் பின்னணி உடைய 19,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்சோ வழக்குகள் மட்டும் 6,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2,800 போக்சோ வழக்குகள் கடந்த மே 10-க்கு முன்பாகப் புகார் அளிக்கப்பட்டும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தன. அந்த வழக்கையும் சேர்த்தே நாங்கள் தற்போது பதிவு செய்துள்ளோம். காவல்துறைக் துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது."

"நாங்கள் மக்கள் பணிகளில் 100 சதவீதம் கவனம் செலுத்தி வருகிறோம். குடிபோதை, தகாத உறவு, தனிப்பட்ட சண்டை போன்ற காரணங்களால்தான் பெரும்பாலான கொலைகள் நடைபெற்றுள்ளன. மு.க. ஸ்டாலின் போன்று வீட்டில் தூங்கிவிட்டு, மாப்பிள்ளையும் மகனும் ஆட்சியை நிர்வாகம் செய்யவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரடியாக விசாரித்து, ஒவ்வொரு துறையையும் நேரடியாகக் கண்காணித்து வருகிறார். காவல்துறையை மேம்படுத்தும் வகையில் அடுத்த 6 மாதங்களில் 10,000 காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."

தீபாவளி நாளில் நடைபெற்ற கொலைகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியது தவறு என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.