தூத்துக்குடியில் முத்துக்குளியல்துறை பரதர் நலச்சங்கத் தலைவர் கனகராஜ், செயலாளர் ராஜு, பொருளாளர் மிக்கேல், அமைப்பாளர் மெரின்டோ ராயர், துணைத் தலைவர்கள் சசிந்தன், இருதயராஜ் மஸ்கர்னாஸ், சுரேஷ், செல்வராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர் போரஸ் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: "கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், அப்போதைய அதிமுக அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம், இச் சம்பவத்திற்குக் காரணமான 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தது.

துப்பாக்கிச் சூடு நடந்த சில நாட்களிலேயே அப்போதைய நடிகராக இருந்த இன்றைய முதலமைச்சர் விஜய், இரவோடு இரவாகத் தூத்துக்குடிக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் தங்களை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினர்.

ஆனால், தற்போது வரை அந்த 21 அதிகாரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், அரசு சிபிஐ-க்கு ஆதரவாக வழக்கை வாபஸ் பெற்றுவிட்டதாக வரும் செய்திகள் தூத்துக்குடி மக்களைப் பெரும் விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

"இவ்வழக்கு வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டப்பேரவை அரசு சார்பில் நல்ல பதிலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

இவ் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், பரதர் நலச்சங்கம் சார்பில் மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்" என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், "சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைத்தால் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மீனவ கிராம மக்களும், அவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே, இத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்திச் சென்னையில் நடைபெறும் போராட்டங்களுக்குத் தூத்துக்குடி பரதர் நலச்சங்கம் முழு ஆதரவு அளிப்பதோடு, தூத்துக்குடியிலும் போராட்டங்களை முன்னெடுக்கும்" எனத் தெரிவித்தனர்.