தூத்துக்குடி மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தெப்பக்குளம் பழமை மாறாமல், நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வரும் 2 மாதங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர், வைகுண்டபதி பெருமாள், மாரியம்மன், முத்தாரம்மன் மற்றும் மேலூர் பத்திரகாளியம்மன் ஆகிய ஆன்மீகத் தலங்கள் சூழ்ந்த பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் தை மாதம் இக்குளத்தில் தெப்பத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுத் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டபோது, எதிர்பாராத விதமாகத் தெப்பக்குளத்தின் சுவர்கள் சிதைந்தன. இதனையடுத்து, பழமை மாறாமல் நவீன வசதிகளுடன் தெப்பக்குளத்தைச் சீரமைத்துத் தருவதாக மேயர் உறுதியளித்திருந்தார்.

அதன்படி, மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தெப்பக்குளம் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தெப்பக்குளத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி, பணிகளின் தரம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின் மேயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெப்பக்குளத்தின் தென்புறத்தில் பொதுமக்களுக்கும் தெப்பத் திருவிழாவிற்கும் இடையூறாக இருந்த மின்சார வாரியத்தின் டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் 2 மின்கம்பங்கள் மாநகராட்சி நடவடிக்கையால் வெற்றிகரமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வரும் தெப்பக்குளத்தில் செயற்கை முறையில் இயற்கையான நீர்வீழ்ச்சி, இரவை பகலாக்கும் மின்னொளி விளக்குகள், பொதுமக்கள் அமருவதற்கான பூங்கா வசதிகள் மற்றும் சிறுவர்களுக்கான ஊஞ்சல், சறுக்கு போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

MayorTheppakulam.jpg

ஆண்டுக்கு ஒருமுறை தெப்பத் திருவிழாவின் போது மட்டும் பயன்படுத்தப்பட்ட இக்குளத்தை, வருடத்தில் 365 நாட்களும் பொதுமக்கள் வந்து கண்டு களிக்கும் வகையில் இரவு பகலாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 மாதங்களில் அனைத்துப் பணிகளும் நிறைவுற்று மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்றார். ஆய்வின்போது மாநகராட்சி செயற்பொறியாளர் லெனின் மற்றும் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.