தூத்துக்குடி தாமோதரன் நகர் பிரதான சாலையின் வழியாகக் காமராஜ் கல்லூரி, அன்னம்மாள் கல்லூரி, மேலசண்முகபுரம், வண்ணார் தெரு, புதுக்கிராமம் மற்றும் திருச்செந்தூர் மார்க்கமாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் விதிமுறைகளை மீறிச் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவிகளும், பணிகளுக்குச் செல்லும் ஊழியர்களும் மணி கணக்கில் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
சாலையோர ஆக்கிரமிப்புகளால் சாலையின் அகலம் வெகுவாகக் குறைந்து, எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் இச் சாலையில் அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
மேலும், இச்சாலையில் குடிநீர்க் குழாய் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால் அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பள்ளிச் சிறுவர்களும் பள்ளத்தில் விழாமல் இருக்க வாகனங்களை ஒதுக்கிச் செல்லும்போது விபத்துகளில் சிக்குகின்றனர். குறிப்பாகப் பெண்கள் இப்பள்ளங்களைக் கவனிக்காமல் வாகனங்களை இயக்கி தினந்தோறும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

எனவே, விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டுத் தாமோதரன் நகர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், ஆபத்தான முறையில் உள்ள பள்ளங்களை உடனடியாக மூடிச் சீரமைக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திற்கும், போக்குவரத்து காவல் துறைக்கும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

