தூத்துக்குடி மாவட்டம் பனையூர் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள அரிய உள்நாட்டு கடல் புதைபடிவ (Marine Fossils) தளத்தை, லக்னோவைச் சேர்ந்த பீர்பல் சஹானி புதைபடிவ அறிவியல் நிறுவனம் (BSIP) உள்ளிட்ட முதன்மை ஆய்வு நிறுவனங்களின் மூத்த விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (TNSDA) குழுவினர் நேரில் பார்வையிட்டு கூட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.
இக்கள ஆய்வில் மூத்த விஞ்ஞானிகள் முனைவர். மோர்தேகாய், முனைவர். பிரசன்னா, முனைவர். கார்த்திக், முனைவர் பினிதா ஆகியோருடன் பட்டினமருதூர் அகழாய்வு திட்ட இயக்குநர் அஜய் குமார் மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வுக் குழுவினர் பங்கேற்றனர்.
ஏற்கனவே இந்திய விலங்கியல் ஆய்வுத் துறை (ZSI, கொல்கத்தா) ஆவணப்படுத்திய அதே புவியியல் அமைவிடங்களிலிருந்து, ஆய்வகப் பகுப்பாய்விற்கான எதிர் மாதிரிகளை (Counter-samples) விஞ்ஞானிகள் முறையாகச் சேகரித்தனர்.
ஆய்வாளர் பெ. ராஜேஷ் செல்வரதி விஞ்ஞானிகள் மற்றும் தொல்லியல் குழுவினரை தளத்திற்கு அழைத்துச் சென்று பின்வரும் முக்கிய தரவுகளை நேரில் விளக்கினார்:
* புதைபடிவ பரப்பளவு: பனையூரின் தென்பகுதியில் உள்ள நன்னீர் வாழ் நத்தைகளின் கல் படிமங்கள் (Petrified freshwater mollusks) மற்றும் கடல்வாழ் புதைபடிவ படுகைகள் வழி வெளிப்படும் தொல்-சுற்றுச்சூழல் மாற்றங்கள்.
* பண்டைய நீரியல் தொழில்நுட்பம் & வரைபடங்கள்: 1778-ஆம் ஆண்டு ராபர்ட் ஓர்ம் வரைந்த வரைபடக் குறிப்புகள், முன்னோர்களின் பாதுகாக்கப்பட்ட வளைகுடா அமைப்புகள் மற்றும் கடல் அலை இயக்கவியல் தத்துவங்கள்.
* வேதியியல் ஆய்வு முடிவுகள்: நிலத்தடி நீர் ஆய்வக முடிவுகளின்படி, புதைபடிவ படுகையிலிருந்து புரோமைடு (Bromide) மற்றும் அயோடைடு (Iodide) கனிமங்கள் உள்ளூர் நிலத்தடி நீரில் தொடர்ந்து கசிந்து வருவது தொடர்பான அறிவியல் சான்றுகள்.
சேகரிக்கப்பட்ட மாதிரிகள் நவீன ஐசோடோப் பகுப்பாய்வு (Isotope analysis) மற்றும் காலக்கணிப்பு (Geochronological Dating) சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, மன்னார் வளைகுடாவின் தொன்மைக்கால கடலியல் மாற்றங்கள் அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட உள்ளன.
மத்திய-மாநில தொல்லியல் மற்றும் புவியியல் வல்லுநர்களின் இந்த ஒருங்கிணைந்த ஆய்வு, பனையூர் தளத்திற்கு தேசிய புவி-பாரம்பரியச் சின்னம் (Geo-Heritage Monument) அங்கீகாரம் பெறுவதற்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.

