இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பேசுகையில் தெரிவித்ததாவது: "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்தல் கல்வியறிவு குழு அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்குத் தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், அரசியலமைப்பு அதிகாரம், தேர்தலை நிர்ணயிக்கும் சட்டங்கள், தேர்தல் ஆணையத்தின் படிநிலைகள் மற்றும் ஊடக அறிவாற்றல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 'ECI NET' டிஜிட்டல் நிர்வாகத் தளங்கள் வழியாக e-EPIC பதிவிறக்கம் செய்தல், 'சக்ஷம்' (Saksham) செயலி, 'KYC - Know Your Candidate' செயலி பயன்பாடு மற்றும் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து, தேர்தல் மற்றும் ஜனநாயகம் தொடர்பான வினாடி-வினா, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் மற்றும் பேச்சுப் போட்டிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இப் போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் விவரங்களை, 'தேர்தல் கல்வியறிவு குழு 2.0' இணையதளத்தில் (elc.eci.gov.in) பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது பயனர் முகவரியை (User ID) உள்ளீடு செய்து உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இளம் வாக்காளர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் அவசியத்தை எடுத்துரைத்த ஆட்சியர், 'தேர்தல் கல்வியறிவு குழு 2.0' திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குத் தேசிய வாக்காளர் தினத்தன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், மாநில அளவில் சிறப்பாகச் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் விருதுகள் வழங்கிப் கௌரவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மி.பிரபு, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்தல் கல்வியறிவு குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.