தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த கோமகன் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து பிறந்தநாள் நாளை (நவம்பர் 15) கொண்டாடப்பட உள்ள நிலையில், தூத்துக்குடி வட்டத்தெப்பம் பகுதியில் அமைந்துள்ள அவருடைய சிலையைப் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்களில் முக்கியமானவரான ராவ் பகதூர் குரூஸ் அவர்களின் காலத்தில்தான் தூத்துக்குடி மக்களுக்கு முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. அவரது அரும்பணியைப் போற்றும் விதமாக வட்டத்தெப்பம் பகுதியில் அவருக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நாளை அவருடைய பிறந்தநாள் விழா நடைபெற உள்ளதையொட்டி, சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்தல், சிலைக்கு வர்ணம் பூசுதல் மற்றும் பீடத்தைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரவேல் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனோ தலைமையில் பணியாளர்கள் இப்பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய விழாவிற்கு முன்னதாக அனைத்துப் புதுப்பிப்புப் பணிகளும் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய பிறந்தநாள் விழாவில் பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், சிலை அமைந்துள்ள பீடத்திற்கு முன்புறப் பகுதியில் காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூடாரம் இடையூறாக உள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை பிறந்தநாள் விழாவின்போது மலர் தூவி மரியாதை செலுத்த வரும் பொதுமக்களுக்கும் விசுவாசிகளுக்கும் இது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், விழாவிற்கு முன்னதாக அந்தத் தற்காலிகக் கூடாரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது விசுவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.