திருச்செந்தூரில் நாளை (நவ. 15) நடைபெறவுள்ள கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, தனிநபர் வாகனங்களுக்கு எந்தவொரு சிறப்பு அனுமதி அட்டையும் வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டித் திருவிழா கடந்த நவம்பர் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (நவம்பர் 15) நடைபெறவுள்ளது.

சூரசம்ஹாரத்தைக் காணத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் திருச்செந்தூர் ஜெ.ஜெ. நகர், வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் தனிநபர் வாகனங்களை நிறுத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், அதிகப்படியான வாகனங்களால் நகரில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், பக்தர்கள் தங்களது சொந்த மற்றும் தனிநபர் வாகனங்களில் வருவதை இயன்றவரை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்குப் பதிலாகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தித் திருச்செந்தூருக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாளை (15.11.2026) நடைபெறவுள்ள சூரசம்ஹார நிகழ்வினை முன்னிட்டு, தனிநபர் வாகனங்களுக்கென எவ்விதச் சிறப்பு அனுமதி அட்டையும் (Vehicle Pass) வழங்கப்படமாட்டாது.

எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இதனை முழுமையாகக் கவனத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரால் வெளியிடப்படும் போக்குவரத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.