தூத்துக்குடி மாநகராட்சி பொறியியல் பிரிவில் பணிகளுக்கான பில் தொகையை விடுவிக்க 11 சதவீதம் வரை கமிஷன் கேட்கப்படுவதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் எழுந்துள்ள புகார் மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சியில் பிப்ரவரி மாதம் டெண்டர் விடப்பட்டு, தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிப் பணிகள் தற்போது தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முடிவடைந்த பணிகளுக்கான தொகையைப் பெறுவதற்கு ஒப்பந்ததாரர்கள் 'பில்' (Bill) போடச் செல்லும்போது, பொறியியல் பிரிவில் பதவிக்கு ஏற்றவாறு படிப்படியாக (Step-by-step) மொத்தமாக 11 சதவீதம் வரை கமிஷன் தொகை கேட்கப்படுவதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்தக் கமிஷன் விவகாரம் தொடர்பாகப் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள பொறியாளர்கள் மீது ஒப்பந்ததாரர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த கால மாநகராட்சிப் பணி நியமன முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ள விவகாரம் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பணி நியமனத்தின்போது தூத்துக்குடி மாநகராட்சிக்கு வந்த பெண் பொறியாளர்கள் சிலர்தான் தற்போதைய கமிஷன் விவகாரத்தில் மிகவும் கறாராக இருந்து பணம் பெறுவதாக மாநகராட்சி வட்டாரங்களிலும், ஒப்பந்ததாரர்கள் தரப்பிலும் அதிர்ச்சியுடன் கூறப்படுகிறது.
ஏற்கனவே குறைந்த விலைக்கு டெண்டர் எடுத்துப் பணிகளைச் செய்து வரும் நிலையில், 11 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மீதமுள்ள தொகையில் தரமற்ற பணிகளையே செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என ஒப்பந்ததாரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் புதிதாகப் போடப்படும் சாலைகள் சில மாதங்களிலேயே சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகப்படியான கமிஷன் நெருக்கடி காரணமாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் தரப்பில் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

