தூத்துக்குடி துறைமுகத்திற்கு இந்தோனேசியாவிலிருந்து வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ. 2.5 கோடி மதிப்பிலான 25 டன் கொட்டைப்பாக்குகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடந்த வாரம் கப்பல் மூலம் வந்த 40 அடி நீளம் கொண்ட கண்டெய்னர் ஒன்றில், 'வறுத்து உடைத்த கொட்டைப்பாக்கு' இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கண்டெய்னர் வழக்கமான சுங்க நடைமுறைகளின்படி சோதனைக்காகத் தட்டப்பாறை சாலையில் உள்ள தனியார் கண்டெய்னர் முனையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த கண்டெய்னரை முழுமையாகச் சோதனை செய்தனர். அப்போது, அதிகாரிகளை ஏமாற்றும் வகையில் கண்டெய்னரின் முன்பகுதியில் மட்டும் வறுத்து உடைத்த கொட்டைப்பாக்கு மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு, அதன் உட்பகுதியில் முழு கொட்டைப்பாக்கு மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் சுமார் ரூ. 2.5 கோடி மதிப்பிலான 25 டன் முழு கொட்டைப்பாக்குகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொட்டைப்பாக்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதிக்கவில்லை என்றாலும், முழு கொட்டைப்பாக்கு இறக்குமதிக்கு 108 சதவீதம் (டன் ஒன்றுக்குச் சுமார் ரூ. 10 லட்சம் வரை) இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. ஆனால், பதப்படுத்தப்பட்டு வறுத்த பாக்கு இறக்குமதிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இதனால், அதிகப்படியான இறக்குமதி வரியை ஏய்ப்பு செய்யும் நோக்கில் வறுத்த பாக்கு என்ற பெயரில் முழு கொட்டைப்பாக்கு கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாகத் தூத்துக்குடி வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இக்கடத்தலில் ஈடுபட்ட நபர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.