தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையான வி.வி.டி. சாலையில் அமைந்துள்ள கால்வாய்ப் பள்ளங்களால் தொடர்ந்து விபத்துகளும், உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டு வருவதால், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வி தி லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர் ஆர். காசிலிங்கம் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மிகப் பிரதான சாலையான வி.வி.டி. சாலையில் பல வருடங்களாகத் தொடர்ந்து பல்வேறு சாலை விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல உயிர்ச் சேதங்களும், பலருக்குக் கை, கால்கள் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சாலையில் மட்டும் சுமார் 120 கால்வாய்ப் பள்ளங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்றுப் பல போராட்டங்கள் நடத்தியும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை அம்பத்தூரில் நடந்த விபத்துச் செய்தியைப் பார்த்தபோது மிகுந்த வேதனையாக உள்ளது. தூத்துக்குடியிலும் அதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடராமல் இருக்க, மாவட்ட ஆட்சியர் அவர்கள் வி.வி.டி. சாலையை நேரில் ஆய்வு செய்து, உரிய சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும்." இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

