தூத்துக்குடி தனியார் கண்டெய்னர் முனையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், சர்வதேச சந்தை மதிப்பில் ரூ. 5 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 20 அடி நீள சரக்குப் பெட்டகம் ஒன்று தனியார் கண்டெய்னர் முனையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அந்தச் சரக்குப் பெட்டகத்தில் கால்சியம் கார்பனேட் (பதப்படுத்தப்பட்ட சுண்ணாம்புத் தூள்) இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் மீது சந்தேகம் அடைந்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அந்தச் சரக்குப் பெட்டகத்தைத் திறந்து தீவிர சோதனையிட்டனர்.
இந்தச் சோதனையில், சரக்குப் பெட்டகத்தின் முன்பகுதியில் கால்சியம் கார்பனேட் மூட்டைகளும், பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டு 5 டன் கசகசா மூட்டைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 5 கோடி எனக் கூறப்படுகிறது. உடனே அதிகாரிகள் அவற்றை முழுமையாகப் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக ஒருவரைக் கைது செய்தனர். எனினும் விசாரணை கருதி கைதானவரின் பெயர் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "கசகசா இறக்குமதிக்கு மத்திய அரசு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், இப்பொருளுக்குக் கூடுதல் இறக்குமதி வரியும் செலுத்த வேண்டும். வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காகவே போலி ஆவணங்களைத் தயாரித்து, கால்சியம் கார்பனேட் என்ற பெயரில் கசகசாவை சட்டவிரோதமாக இறக்குமதி செய்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.

