தூத்துக்குடியில் இருந்து சென்னைக்குக் கூடுதல் ரயில் சேவை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நல சங்கம் சார்பில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நல சங்க செயலாளர் எம். பிரமநாயகம் அளித்துள்ள மனுவில், "கடந்த 145 ஆண்டுகளாகத் தூத்துக்குடி - சென்னை இடையே முத்துநகர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் என்ற ஒரே ஒரு தினசரி ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுக்கு முன்பு பகல் நேர 'லிங்க்' எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வந்த நிலையில், தொற்றுக்குப் பின்னர் அந்தச் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால், சென்னைக்குக் கூடுதல் ரயில் சேவை மிக அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தூத்துக்குடி - சென்னை இடையே பகல் நேர இன்டர்சிட்டி (Intercity) அல்லது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயிலை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது தூத்துக்குடியிலிருந்து கோயம்புத்தூர் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மேம்படுத்த வேண்டும்.

மதுரை - லோகமான்ய திலக் (மும்பை) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை (எண்: 22101-22102) தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

தற்போது மதுரை - சென்னை இடையே வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப்படும் ரயிலை (எண்: 22623-22624) தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில் நகரமான தூத்துக்குடியின் வளர்ச்சியையும், பயணிகளின் நீண்ட நாள் தேவையையும் கருத்தில் கொண்டு இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி வஉசி கல்லூரி பவள விழாவிற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதியை தூத்துக்குடி தொழிலதிபர் சி. பிரேம்குமார் நேரடியாக சந்தித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தின் சார்பாக கோரிக்கைகளை முன் வைத்தார். இக்கோரிக்கைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக துணை ஜனாதிபதி உறுதி அளித்தார்.