தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கே.தங்கம்மாள்புரத்தில் உள்ள அரசு சமூகநீதி மாணவ, மாணவியர் விடுதிகளில் கடந்த ஓராண்டுக்கு மேலாகத் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் 1 கி.மீ. தூரம் நடந்து சென்று கண்மாய்க் கரையில் உள்ள அடிகுழாயில் குளிக்கும் அவல நிலை நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கே.தங்கம்மாள்புரம் கிராமத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு சமூகநீதி மாணவர் விடுதியிலும், 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் மாணவியர் விடுதியிலும் தங்கிப் பயின்று வருகின்றனர்.
இந்த இரு விடுதிகளிலும் கடந்த ஓராண்டுக்கு மேலாக முறையான தண்ணீர் வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் குளிக்க முடியாமலும், கழிவறை செல்ல முடியாமலும், துணிகளைத் துவைக்க முடியாமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தாங்கள் சாப்பிட்ட உணவுத் தட்டுகளைக் கூடக் கழுவப் போதிய தண்ணீர் இல்லாமல் தினந்தோறும் மிகுந்த இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றனர்.
விடுதிகளில் தண்ணீர் இல்லாத காரணத்தினால், மாணவர்கள் தினமும் விடுதியிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, ஊரின் கண்மாய்க் கரையில் உள்ள அடிகுழாயில் தண்ணீர் அடித்து அங்கேயே குளித்து, துணிகளையும் துவைக்கின்றனர். மேலும், கழிவறை பயன்பாட்டிற்கும், உணவுத் தட்டுகளைக் கழுவுவதற்கும் வாளிகளில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு மீண்டும் 1 கி.மீ. தூரம் விடுதிக்கு நடந்து செல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
விடுதிகளுக்கு முறையான தண்ணீர் வழங்கக் கோரி, கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், விடுதிகளுக்கு விரைவில் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், கே.தங்கம்மாள்புரத்தில் உள்ள இந்த அரசு சமூகநீதி விடுதி கடந்த 2025-ஆம் ஆண்டு சுமார் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையில் சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டும், அடிப்படைத் தேவையான தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தரவில்லை எனப் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாணவர்கள் தினமும் 1 கிலோமீட்டர் தூரம் கண்மாய்க் கரைக்கு நடந்து சென்று தண்ணீர் பிடிப்பது அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. தற்போது கண்மாயில் தண்ணீர் இல்லாத நிலையில், மழை பெய்து கண்மாயில் அதிக அளவில் தண்ணீர் தேங்கினால் மாணவர்கள் அதில் இறங்கிக் குளித்து விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, மாணவ, மாணவிகளின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விடுதிகளுக்கு உடனடியாகத் தடையின்றித் தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

