தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ‘வளமான வளர்ச்சிக்கு நேர்மை’ என்ற கருப்பொருளின் கீழ், கண்காணிப்பு விழிப்புணர்வு வார நிறைவு விழா இன்று (நவ. 13) நடைபெற்றது.
விழாவில் துறைமுகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி பி. கவின் மகாராஜ் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன், பேசுகையில், "கண்காணிப்பு என்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பு. துறைமுகத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, பணிகளின் தரத்தை உறுதி செய்து உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, துறைமுக ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பேரணி, தெருநாடகம், கட்டுரை, கவிதை, விவாதம், கோலப் போட்டிகள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
நிறைவு விழாவில் இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக, துணைத் தலைமை கண்காணிப்பு அதிகாரி ஆர். பத்மநாபன் நன்றி கூறினார்.
இதில் துறைத் தலைவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இத்தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

