தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், மகளிருக்கு இலவசமாக 5 வெள்ளாடுகள் மற்றும் கறவைப் பசு வழங்கும் திட்டங்களுக்கு வரும் நவம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், நிகழாண்டில் 'வெற்றி மகளிர் ஆடு வழங்கும் திட்டம்' முதற்கட்டமாக கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் கீழ் ரூ. 30,000 மதிப்புள்ள 5 வெள்ளாடுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
அதேபோல், கறவைப் பசு வழங்கும் திட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ரூ. 50,000 மதிப்புள்ள ஒரு கறவைப் பசு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். கறவைப் பசு திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அதிகபட்சம் 25 ஏக்கர் வரை சொந்த நிலம் வைத்திருக்கலாம்.
இத்திட்டங்களில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட மகளிர் பயன்பெறலாம். ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கன்னிகள், திருநங்கைகள், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை & தேவையான ஆவணங்கள்: விருப்பமுள்ள மகளிர் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்துவோருக்கு)சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
நவம்பர் 16 முதல் டிசம்பர் 5-ஆம் தேதி வரை கால்நடை பராமரிப்புத் துறையின் பிரத்யேக இணையதளம் மூலமாகவோ, அருகிலுள்ள இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது ஊராட்சி ஒன்றியத் தலைமையிட கால்நடை நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள பல்நோக்குப் பணியாளர்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

