தூத்துக்குடி டுவிபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் லட்சுமணன் (34), இவரது நண்பரான அண்ணா நகர் 6-வது தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் இசக்கிமாரி என்ற பாண்டா (17) ஆகியோர் கடந்த 13-ஆம் தேதி இரவு அண்ணா நகர் 12-வது தெருவில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்துத் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், அண்ணா நகர் 4-வது தெருவைச் சேர்ந்த அமிர்தராஜ் மகன் அஸ்வந்த் குமார் (25), அண்ணா நகர் 12-வது தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் திருமுருகராஜ் (29), செல்வராஜ் மகன் செல்வ மாடசாமி (31), குரு களஞ்சி மகன் மகேஷ் பூபதி (27) மற்றும் டுவிபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் மகன் அருள்ராஜ் (25) ஆகிய 5 பேர்தான் இத்தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
கடந்த 12-ஆம் தேதி லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள் தங்கள் நண்பர் முத்துலட்சுமணன் மறைவையொட்டி அவரது படலத்தை வைத்து அனுதாபம் தெரிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த அஸ்வந்த் குமார், திருமுருகராஜ் உள்ளிட்டோர் அவர்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டு தகராறு செய்துள்ளனர்.
அந்த முன்விரோதத்தின் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. கைது செய்யப்பட்டவர்களில் திருமுருகராஜ், தமிழக வெற்றிக் கழகத்தில் அண்ணா நகர் மேற்குப் பகுதி இளைஞரணி அமைப்பாளராகப் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

