தூத்துக்குடியில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு தென் மண்டல கலந்தாய்வுக் கூட்டம் கூட்டமைப்பின் தேசிய ஆலோசகர் கீதா ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
மத்திய அரசின் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களால் தொழிலாளர் உரிமைகள் மற்றும் மாநிலத் தொழிலாளர் நல வாரியங்கள் பாதிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொழிலாளர் நல வாரியங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும், மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வரும் நவம்பர் 26 (அரசியலமைப்பு தினம்) அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பீடித் தொழிலாளர் யூனியன் தலைவர் அன்னக்கவுரி, நெய்தல் பாதுகாப்பு இயக்கத் தலைவர் கெபிஸ்டன், AICCTU மாநிலக் குழு உறுப்பினர் மின்னல் அம்ஜத், HMS உடல் உழைப்புத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டாக்டர் ராஜலட்சுமி, தாயக தொழிலாளர் முன்னணி மாவட்டப் பொறுப்பாளர் S.R. அகமது, நாட்டுப்படகு சங்கப் பிரதிநிதி ஆல்பன், உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமலட்சுமி மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர் அமைப்புகளின் நிர்வாகிகள், பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிலாளர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

