தூத்துக்குடியில் உள்ள ராதாகிருஷ்ணன் ஆலயமான நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராதா-கிருஷ்ணரின் பிருந்தாவன வாழ்க்கை மற்றும் கோபியர்களுடனான ஆன்மீகச் சூழலை நினைவூட்டும் வகையில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ராதாகிருஷ்ணரைச் சுற்றி கோபியர்கள் நடனமாடுவது போன்ற தத்ரூபமான அலங்காரங்கள் செய்யப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் கிருஷ்ண ஜெயந்தி பெருவிழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஸ்ரீமத் பாகவத பாராயணம், மதுரகீதம், வெவ்வேறு வாகனங்களில் ராதா-கிருஷ்ணர் வீதி உலா மற்றும் ஆன்மீக அருளுரைகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் 7-ஆம் திருநாளான நேற்று, சுவாமிக்கு விமரிசையான ஊஞ்சல் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ராமசாமி பாகவதாரின் ஆன்மீக அருளுரை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்றனர்.
பத்து நாட்கள் நடைபெறும் இப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ ராதா கல்யாணம் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

