தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் ஜி. ஸ்டாலின் பாக்கியநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அப்போது, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தியைத் தடுக்கும் நடைமுறைகள் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையின் அவசியத்தை விளக்கி விழிப்புணர்வு உரையாற்றினார்.

வீடுகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி கிடக்கும் நல்லீரை அகற்றுதல், கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்தல் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்தல் ஆகியவை டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என அவர் வலியுறுத்தினார்.

மாணவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதுடன், பொதுமக்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும், சமூகப் பங்கேற்பை ஊக்குவிப்பதிலும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் முக்கிய பங்களிப்பை இந்நிகழ்ச்சி எடுத்துரைத்தது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் த. நடராஜன் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் , இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டர்.