தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் ரயில் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையச் சாலையின் இருபுறமும் முள்செடிகளும் புதர்களும் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும், போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மழைக்காலங்களில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக பிரதான ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கம். அத்தகைய அவசரக் காலங்களில், தூத்துக்குடி மாநகரப் பகுதியிலிருந்து சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்திலிருந்தே புறப்பட்டுச் செல்கின்றன.

அக்காலக்கட்டங்களில் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் தூத்துக்குடி மாநகரப் பகுதியிலிருந்து மீளவிட்டான் ரயில் நிலையத்தை அடைவதற்குள் கரடுமுரடான சாலைகள், அடர்ந்த முள்செடிகள் மற்றும் இருள் சூழ்ந்த பாதையால் கடுமையான இன்னல்களைச் சந்திக்கின்றனர்.

MeelavittanRoad1.jpg

எனவே, மீளவிட்டான் ரயில் நிலையப் பாதையைத் தார்ச்சாலையாகத் தரம் உயர்த்திப் புதிய சாலை அமைக்க வேண்டும், சாலையின் இருபுறமும் மண்டிக்கிடக்கும் முள்செடிகளையும் புதர்களையும் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும், இரவு நேரப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய மின்விளக்குகளை அமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.