மணப்பாடு புனித திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழாக் கூட்டுக் திருப்பலியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மெய்யான சிலுவையின் ஒரு சிறிய பகுதி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இவ்வாலயத்தின் 447-வது ஆண்டு மகிமை பெருவிழா கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று காலை திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி மற்றும் உண்மையான சிலுவை ஆசீரைத் தொடர்ந்து கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், சிறப்புப் பிரார்த்தனைகளும் நடைபெற்று வந்தன.
கடந்த 12-ஆம் தேதி திவ்ய ஐந்து திருக்காய சபையின் தேர்வுக்குழு நியமனம் மற்றும் மெய்யான திருச்சிலுவை பவனி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக மாலையில் மலையாள கூட்டுக் திருப்பலியும், ஆயர் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து வருகை தந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பெருவிழா நாளன்று அதிகாலை புனித யாகப்பர் ஆலயத்திலும், திருச்சிலுவை நாதர் ஆலயத்திலும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சிறப்புத் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, திருத்தலத்தைச் சுற்றி ஐந்து திருக்காய சபையினரின் பவனியும், அதனைத் தொடர்ந்து ஆயர் தலைமையில் பெருவிழாக் கூட்டுக் திருப்பலியும் நடைபெற்றது.
மாலையில் புனித யாகப்பர் ஆலயத்தில் நற்கருணை ஆசீர் மற்றும் மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல் நிகழ்வு நடைபெற்றது.
மாலை 5.30 மணிக்குத் திருத்தல வளாகத்தில் கொடியிறக்கப்பட்டு, நன்றித் திருப்பலியுடன் திருவிழா நிறைவுற்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை புனித யாகப்பர் ஆலயம் மற்றும் திருச்சிலுவை நாதர் ஆலயத்தில் சிறப்பு நன்றித் திருப்பலி நடைபெறுகிறது.

