தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 335.23 மீட்டர் நீளம் கொண்ட 'எம்.வி. சி.எம்.ஏ சி.ஜி.எம் தோரியம்' என்ற மிக நீளமான பிரம்மாண்ட சரக்குப்பெட்டகக் கப்பலை வெற்றிகரமாக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த 2026 செப்டம்பர் 14 அன்று தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்திற்கு வந்தடைந்த இக்கப்பல் 335.23 மீட்டர் நீளமும், 51 மீட்டர் அகலமும், 13.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. பிரேசிலின் சான்டோஸ் துறைமுகத்திலிருந்து வந்த இக்கப்பல், மெத்தனால் மற்றும் கடல்சார் எரிபொருள் ஆகிய இருவகை எரிபொருட்களிலும் இயங்கும் நவீன தொழில் நுட்பம் கொண்டது.
இக்கப்பலிலிருந்து மொத்தம் 3,276 டி.இ.யு சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட உள்ளன. இதில் 1,324 டி.இ.யு இறக்குமதி சரக்குகளும், 1,952 டி.இ.யு மறுஏற்றம் செய்யப்படும் சரக்குகளும் அடங்கும். இக்கப்பல் தூத்துக்குடியிலிருந்து மீண்டும் சிங்கப்பூருக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்குமுன் கடந்த 2025 டிசம்பரில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கையாளப்பட்ட 'எம்.வி. எம்.எஸ்.சி மிகாலா' என்ற 304 மீட்டர் நீளக் கப்பலின் சாதனையை இப் புதிய கப்பல் முறியடித்துள்ளது. இக்கப்பலின் வருகையை முன்னிட்டு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், வ.உ.சி துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன், கப்பலின் மாலுமியை நேரில் வரவேற்றார்.
இச்சாதனை குறித்து துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தெரிவிக்கையில்: "வ.உ.சி துறைமுகம் இதுவரை கையாண்டுள்ள சரக்குக் கப்பல்களிலேயே மிக நீளமான இக்கப்பலை வெற்றிகரமாகக் கையாண்டிருப்பது, துறைமுகத்தின் சர்வதேசக் கடல்சார் உட்கட்டமைப்பின் தகைமையைக் காட்டுகிறது. இச்சாதனை சர்வதேசக் கப்பல் நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

