தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கடைகளின் ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத வாகன நிறுத்தம், மூடப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் கழிப்பறைகளில் குவியும் மது பாட்டில்களால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பராமரிப்பில் இயங்கும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, கோவில்பட்டி, இராமேஸ்வரம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக் கணக்கான பயணிகளும், விடுமுறை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையிலான பொதுமக்களும் இப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய பாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கடைகளை விரித்துள்ளதால் பயணிகள் நடந்து செல்லக்கூட வழியின்றித் தவிக்கின்றனர். மேலும், பேருந்து நிலைய வளாகத்திலேயே அமைந்துள்ள ஒரு இருசக்கர வாகன விற்பனையகம், விற்பனைக்குரிய அனைத்து வாகனங்களையும் பேருந்து நிலையப் பாதைகளிலேயே வரிசையாக நிறுத்தி ஆக்கிரமித்துள்ளது.
பேருந்து நிலையம் முழுவதும் முறையற்ற இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெருமளவில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்கு வரும் பெண் பயணிகளின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தாய்ப்பாலூட்டும் அறை பூட்டப்பட்டுக் கிடப்பதால் தாய்மார்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல, பயணிகள் தங்களின் உடமைகளைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்கள் வைப்பறையும் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையமும் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
பேருந்து நிலையச் சுகாதாரச் சீர்கேட்டின் உச்சமாக, அங்குள்ள பொதுக் கழிப்பறைகளில் பயன்படுத்தப்பட்ட மது பாட்டில்கள், நெகிழிப் குவளைகள் மற்றும் அரசு தடை செய்த புகையிலைப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. கழிப்பறைகள் அனைத்தும் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதால், பெண் பயணிகளும் பொதுமக்களும் கழிப்பறைகளைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
அடிப்படை வசதிகளே இன்றிச் சீரழிந்து வரும் புதிய பேருந்து நிலையத்தின் அவலநிலையைக் களைந்து, நடைபாதை ஆக்கிரமிப்புகளையும், வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் பொருட்கள் வைப்பறையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும்.
கழிப்பறைகளில் மது அருந்துவதைத் தடுத்து, தூய்மைப் பணிகளை முறைப்படுத்த வேண்டும். புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பட வைத்துப் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி ஆணையர் உடனடியாகக் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

