தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் சீரான மற்றும் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்யும் பொருட்டு, மாநில பேரிடர் நிவாரண நிதியின் (SDRF) கீழ் ரூ.7.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குப் போதுமான அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) ரூ.7.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப் பிரத்யேக நிதியைக் கொண்டு, மாநகராட்சியின் முதன்மை நீர் ஆதாரமாக விளங்கும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் புதிய உறை கிணறு அமைத்தல், புதிய குடிநீர்க் குழாய்கள் பதித்தல் மற்றும் பழுதடைந்த டர்பைன் பம்புகளை அகற்றிவிட்டுப் புதிய பம்புகளைப் பொறுத்தி மாற்றியமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் நடைபெற்று வரும் புதிய உறை கிணறு அமைக்கும் பணியினைத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்தார்.
பொதுமக்களுக்குக் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீஸ், பொறியியல் பிரிவு அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் உடன் இருந்தனர்.

