தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற அறிவுசார் மையம், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போட்டித் தேர்வுப் பயிற்சிகளுக்குப் பெரும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.209.00 லட்சம் மதிப்பீட்டில் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இந்நகர அறிவுசார் மையம் உருவாக்கப்பட்டு, கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இம்மையத்திற்குத் தூத்துக்குடி மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் தினசரி சுமார் 100 இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வந்து பயன் பெற்று வருகிறார்கள்.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் இலவசமாக இணையதளம் வாயிலாக நேரடிப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளவும், தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளவும் ஏதுவாகப் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய விரிவான நூலகம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தனித்தனியே காற்றோட்டமான படிக்கும் அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உள்கட்டமைப்புகளும் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இம்மையத்தில் பயின்ற இளைஞர்களில் இதுவரை 35 பேர் பல்வேறு அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுத் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தூத்துக்குடி மாநகரப் பகுதிவாழ் இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்தித் தங்களது வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.